அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி !

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? என்று ஜூலை 21ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது, உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க அதிகார வரம்பு உள்ளதா என்று ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையற்றது. ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “தற்போதுவரை 6 புகார்கள் வந்துள்ளதாகவும் அவை ஒவ்வொன்றாக பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கபடும் என்றும் விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? என தேர்தல் ஆணையத்திடம் கேள்வியெழுப்பினர். அத்துடன், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற காலவரம்பை குறிப்பிட்டு ஜூலை 21 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts