தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி !

வளர்ச்சியடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், மக்கள்தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என்றும், நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது என்றும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன என்றும், அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன் என்றும், தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரமும், பா.ஜ.க. எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார் என்றும், நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க. நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும் என்றும், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது, ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள் என்றும், இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார், நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே என்றும், பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் இலட்சணம் புரிந்துவிடும் என்றும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு கூறியது, ஆனாலும் ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது என்றும், இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும் என்றும், அ.தி.மு.க. போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க. முன் மண்டியிட்டாலும், தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும் நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts