மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு -அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்வு !

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வரும் காரணமாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயை எட்டியதை அடுத்து பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 60 ஆயிரத்து 740 கனஅடி வீதம் நீர்வரத்து காணப்பட்டது. இந்த நீர்வரத்தானது நேற்று மாலையில் வினாடிக்கு 80 ஆயிரத்து 984 கனஅடியாக அதிகரித்தது.
இதனால், அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 120 அடி உயர மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 118 அடியை எட்டியது. அதே நேரத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அப்போது,அணையின் நீர் இருப்பு 88.59 டி.எம்.சி.யாக இருந்தது. முன்னதாக நேற்று பகலில் மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடிக்கு மேல் உயர்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நீர்வளத்துறையின் மேட்டூர் உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.