மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு -கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி தண்ணீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 78ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 73,452கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேலும், அணையின் நீர்மட்டம் 117.39 அடியை எட்டியுள்ள நிலையில், விரைவில் அணை நிரம்பி உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி முதல் 75 ஆயிரம் கன அடி வரை படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும்.
இதனால் மேட்டூர் அணைக்குக் கீழ்ப் பகுதியில் உள்ள காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களையும் தாழ்வான பகுதியில் உள்ளவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மேட்டூர் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.