டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை -டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை, தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லைஎன்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு நாளை காலை நடைபெறுகிறது. அதன்படி இந்த போட்டி தேர்வு நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. 3
8 மாவட்டங்களிலும் 314 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில், ஆண்கள் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேரும், பெண்கள் 8 லட்சத்தி 63 ஆயிரத்து 68 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 117 பேரும் என ஒட்டுமொத்தமாக 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் தேர்வை எழுதுகின்றனர். தலைநகர் சென்னையில் பொறுத்த வரை 311 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன என்றும், இதில் 94 ஆயிரத்து 848 பேர் பங்கேற்பதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதையொட்டி, தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன.
இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். வழக்கமாக அரசு தேர்வின் போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில், இதனிடையே, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திலிருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்ட தனியார் பேருந்து கதவுக்கு A4 சீட்டில் சீல் வைக்கப்பட்டிருந்ததாகவும், கண்டெய்னர் வாகனங்களில் எடுத்துச் செல்லாமல், தனியார் பேருந்துகளில் எடுத்துச் செல்வதால் வினாத்தாள் கசிய வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
இந்த விவகாரம் தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என்றும், தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், தனியார் பேருந்துகள் மூலம் வினாத்தாளை எடுத்துசென்றது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.