திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்களை நாளை சமர்ப்பிக்க வேண்டும் -நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு !

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நாளை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட்அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது, திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஆஜராகினர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் சிசிடிவி காட்சிகளை கோயில் உதவி ஆணையர் தாக்கல் செய்தார்.
அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்தார். அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள் பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளதாகவும், உடலின் ஒவ்வொரு பாகம் விடாமல் இளைஞர் அஜித்குமார் தாக்கப்பட்டு உள்ளார் என்றும் சாதாரண கொலை வழக்கு போல் இல்லை; அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், பதவி ஆணவத்தில் இளைஞர் அஜித்குமாரை காவலர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர் என்றும் இளைஞர் அஜித்தின் உடலில் எந்த உறுப்பையும் காவலர்கள் விட்டு வைக்கவில்லை என்றும் அஜித்குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
நகை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? யாருடைய உத்தரவினால் வழக்கு தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது? தனிப்படையினர் யார் சொல்லி, எதன் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்தனர்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அஜித்குமாரை அடிப்பதற்காக பைப், கம்புகள், மிளகாய்ப் பொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அஜித்தின் தாயார் அளித்த புகார் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் அஜித் இறப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தருவதாக திருமண மண்டபத்தில் வைத்து சிலர் பேரம் பேசி உள்ளனர் என்று லாக்-அப் மரணங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இளைஞர் அஜித் மரணம் தொடர்பான சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன என்றும், நாட்கள் செல்ல செல்ல சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து ரத்த சாட்சியங்கள் நீக்கப்பட்டது ஏன்?. சம்பந்தப்பட்ட இடத்தில் சாட்சியங்களை சேகரித்தது யார்?. சாட்சியங்களை சேகரிக்காமல் எஸ்.பி. என்ன செய்து கொண்டிருந்தார்?. சாட்சியங்களை சேகரிக்காத எஸ்.பி. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் என்றும் நீதிபதிகள் கூறினர்.
காவல் நிலையத்தில் எதுவுமே நடக்கவில்லை; ஆனால் காவல் நிலைய சிசிடிவியை காண்பித்துள்ளார்கள் என்றும் சம்பவம் அனைத்தும் கோயிலில் நடந்துள்ளது; ஆனால் கோயில் சிசிடிவி காண்பிக்கப்படவில்லை என்றும் வழக்கை இப்படி கையாண்டால் குற்றவாளிகள் எப்படி தண்டிக்கப்படுவார்கள்?. ஏன் வழக்கை முறையாக கையாளவில்லை; இவ்வாறு இருந்தால் விசாரணை எவ்வாறு நடைபெறும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இளைஞர் அஜித் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்புக் குழு விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும், உயரதிகாரிகள் முதல் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சிபிசிஐடி சிறப்புக் குழு நியாயமான விசாரணை நடத்தவேண்டும் என்றும் வழக்கை அரசு உணர்வுப்பூர்வமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும்.
எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்றும் அஜித்குமார் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அஜித்குமார் கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நாளை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் அளிக்க உத்தரவிடுகிறோம் என்றும் இவ்வழக்கில் முழுமையான விசாரணையை நீதிபதி ஜான் சுந்தர்லால் தொடங்க வேண்டும் என்றும் முதற்கட்ட இடைக்கால அறிக்கையை வரும் 8ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.