திருபுவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு -உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி !

திருபுவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதில், உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இதுவரை என்ன உதவி செய்துள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அஜித்குமார் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரண நிதியாக 7.50 லட்ச ரூபாய் வழங்கப் பட்டுள்ளதாகவும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசு வேலை வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை என்று கூறி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்’ என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts