அழியும் நிலையில் உள்ள தங்களது பாரம்பரியக் கலையை மீட்டெடுக்க வேண்டும் – மலைவாழ் மக்கள் கோரிக்கை!

அழியும் நிலையில் உள்ள தங்களது பாரம்பரியக் கலையை மீட்டெடுக்க வேண்டும் என, கொடைக்கானல் தோடர் இன மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 62வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கொடைக்கானல் பூம்பாறை சஷ்டி புகழ் சார்பாக மலைவாழ் மக்களின் தோடர் நடனம் நடைபெற்றது.
மலைவாழ் மக்கள் இந்த நடனத்தை, தங்களது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆடி வருகின்றனர். ஆடி மாதங்களில் நடவு செய்து விவசாயத்தில் ஈடுபடும்போது இந்த நடனத்தை அவர்கள் ஆடுவது வழக்கமாக உள்ளது. இந்த பாரம்பரிய நடனத்தை காலம் காலமாக பாதுகாத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி, துக்கம் என இரண்டிலும் இரண்டறக் கலந்த இந்த பாரம்பரியக் கலையைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தோடர் இன பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.