உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா 3 நாட்களில் 2வது முறையாக வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் ஃப்ரீ ஸ்டைல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஃப்ரீ ஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர், ஒரு ஆண்டில் 5 கட்டங்களாக நடத்தப்படும். ஏற்கனவே 3 கட்டங்கள் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடத்தி முடிக்கப்பட்டன.
இந்த நிலையில் 4வது கட்டமாக அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் 16 போட்டியாளர்கள் தலா 8 பேர் வீதம், ஒரு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரே குரூப்பில் உள்ள வீரர்கள் ரவுண்ட் ராபின் முறையில் மற்றொரு போட்டியாளர்களுடன் மோதினார்கள்.
அதன்படி 2 குரூப்களிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் வீரர்கள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள். இதன்படி பிரக்ஞானந்தா ரவுண்ட் ராபின் சுற்றில் 3 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி உட்பட 4.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார்.
இதன் கடைசி ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனை வெறும் 39 நகர்த்தலில் வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார். தொடர்ந்து காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கரவுனா எதிராக 3-4 என்ற புள்ளிகள் சறுக்கினார். இதனால் கோப்பையை வெல்லும் போட்டியில் இருந்து பிரக்ஞானந்தா வெளியேறினார்.
இந்த நிலையில் கிளாசிக்கல் பிரிவில் பிரக்ஞானந்தா இன்று மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். இதில் மேக்னஸ் கார்ல்சன் கருப்பு நிற காய்களுடன் களமிறங்க, பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் ஆடினார்.
இந்த போட்டியில் 43வது நகர்வில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். மேலும் கடந்த 3 நாட்களில் 2வது முறையாக மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.