கிண்டி ரேஸ் கிளப்பிடம் பசுமை பூங்கா அமைக்க-தமிழ்நாடு அரசு டெண்டர்!

கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்க. விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், ‘வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்’ என்று யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது. மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலர், சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, முடிவெடுக்க வேண்டும் என அவகாசம் கேட்டிருந்தது.
தொடர்ந்து, கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது. இந்நிலையில், கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைகிறது. இதற்காக, விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. வண்ண மலர் படுகைகள், மலர் சுரங்கப் பாதை, தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, பறவைகள் இடம், வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகளுடன் உருவாகிறது.