வேட்டுவம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படபிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு !

வேட்டுவம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படபிடிப்பு செய்யும்போது அவர் காருடன் பறந்து சென்று கீழே விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வேட்டுவம். இந்த படம் நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகவே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சாகச காட்சி படம் பிடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில்,மோகன்ராஜ் நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக நேற்றைய தினம் முதற்கட்டமாக தகவல் வெளியானது. பின்னர், சண்டைக் காட்சிகள் படபிடிப்பு செய்யும்போது அவர் காருடன் பறந்து சென்று கீழே விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது.
விபத்துக்குப் பின்னர், இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் காரில் சிக்கிய மோகன்ராஜை மீட்கும் காட்சிகளும் , அவர் கார் சாகசத்தில் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாகச காட்சிகளை உருவாக்கும் ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகள் எழுந்துள்ளன.