கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகள் -தமிழர்களின் முகங்கள் மறுவடிவமைப்பு !

கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மண் பானை, பகடைக்காய், உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன.
குறிப்பாக, முதுமக்கள் தாழியும் அதன் உட்பகுதியில் மனித எலும்புக்கூடுகளும் கிடைத்தன. அவை 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அவற்றை பகுப்பாய்வு செய்யும் நோக்கில் இரண்டு மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் மாதிரிகளை இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ஜான் மோர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதனடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் இரண்டு முகங்களை மறுவடிவமைப்பு செய்துள்ளனர்.
இதில், முகத்தின் மேல் பகுதி பண்டைய தமிழரின் முகத்துடன் துல்லியமாக ஒத்துப்போகும் வகையில் வடிவமைத்துள்ளனர். அதேநேரம், கீழ்த்தாடை எலும்புகள் இல்லாததால் கீழ்த்தாடை போன்ற பகுதிகள் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன.
கொந்தகையில் கிடைத்த எலும்புக்கூடுகளின் அடிப்படையில், பண்டைய காலத்தில் வாழ்ந்த ஆண்களின் சராசரி உயரம் 5.7 அடியாகவும், பெண்களின் உயரம் 5.2 அடியாகவும் இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பண்டைய தமிழர்களின் முகங்கள் மீட்டுருவாக்கம் என்பது 80 விழுக்காடு அறிவியல், 20 விழுக்காடு கலைப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபணுத் துறைத் தலைவர் பேராசிரியர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
பண்டைய தமிழர்களின் பூர்வீகம் பற்றி அறிய மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.