சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் அதிரடி: பல்லாரி நகை வியாபாரியிடம் 476 கிராம் மீட்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன தங்கக் கவசத்தைச் சுற்றியுள்ள முறைகேடு வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. கர்நாடகாவின் பல்லாரி (பெல்லாரி) மாவட்டத்தில் உள்ள ஒரு நகை வியாபாரியின் வீட்டிலிருந்து 476 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தங்கம் கோயிலின் மாயமான தங்கத்துடன் தொடர்புடையதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை தங்கக் கவச விவகாரம், தொழிலதிபர் விஜய் மல்லையா கேரள தேவாஸ்தான போர்ட்டுக்கு 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தத் தங்கத்தைப் பயன்படுத்தி அய்யப்பன் சிலைக்கான தங்கக் கவசம் தயாரிக்கப்பட்டது. இருப்பினும், 2019-ஆம் ஆண்டு இந்தக் கவசத்தைச் சேமித்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 4.54 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வலையை ஏற்படுத்தியது.
கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) இந்த வழக்கை ஆராய்ந்து வருகிறது. விசாரணையின்போது, வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தி (Unnikrishnan Potti) என்பவரைக் காவலில் எடுத்துள்ளனர். போத்தி, தங்கக் கவசத்தை சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் செப்பனிடும் பணிக்காக அனுப்பியதாகக் கூறியிருந்தார். ஆனால், விசாரணையில் அவர் முறைகேட்டில் ஈடுபட்ட தங்கத்தை பல்லாரி நகை வியாபாரி கோவர்தனன் (Govardhan) என்பவரிடம் விற்றதாக வெளிப்பட்டுள்ளது.SIT குழு பல்லாரி மாவட்டத்தின் ரொத்தம் பகுதியில் உள்ள கோவர்தனனின் வீட்டில் நடத்திய சோதனையின்போது, 476 கிராம் தங்கம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்தத்தெரிய வந்துள்ளது. இந்தத் தங்கம் 2019-ஆம் ஆண்டு போத்தியால் விற்கப்பட்டதாகவும், சபரிமலை கோயிலின் மாயமான தங்கத்துடன் நேரடி தொடர்புடையதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போத்தியின் வீட்டிலிருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள், இந்த மீட்பு சபரிமலை வழக்கில் பெரும் தடயமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். “இது வழக்கின் முக்கிய இணைப்பாக உள்ளது. தங்கத்தின் மீதமுள்ள பகுதியையும், பணத்தின் பயன்பாட்டையும் ஆராய்ந்து வருகிறோம்,” என்று SIT தலைவர் கூறினார். விசாரணை தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு விரிவடைந்துள்ளது.இந்த விவகாரம் கேரள தேவாஸ்தான போர்ட்டின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை வெளிப்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றம் ஏற்கனவே விசாரணையை ஆறு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களிடையே இந்த மீட்பு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் முழு உண்மை வெளியாகும் வரை விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.இந்தச் சம்பவம் சபரிமலை போன்ற புனித தலங்களின் செல்வங்களைப் பாதுகாக்கும் அதிகாரிகளின் பொறுப்பை மீண்டும் நினைவூட்டுகிறது. மேலும் விவரங்கள் விசாரணையின் அடுத்த கட்டங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
