ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு !

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும்.
அதன்படி, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கபட்டது.
இந்நிலையில், இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் புதிய ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 6.25% இருந்த ரெப்போ வட்டியில், 0.25% குறைக்கப்பட்டு 6 விழுக்காடாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர்.
மேலும், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக அமையும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.