ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்த ரயில்வே துறை முடிவு !

புதிதாக தயாரிக்கப்படும் புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவுகளை பொருத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.
படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர்.
பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதிருக்கும் என கூறப்படுகிறது. படுகாயமடைந்த 5 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ரயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரயில் படிக்கட்டில் பயணித்த 5 பேர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, புதிதாக தயாரிக்கப்படும் புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகளை பொருத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
தற்போது, இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.