மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை விரைவில் வழங்க வேண்டும் -பிரதமா் மோடிக்கு, ராகுல் காந்தி கடிதம் !

பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் விளிம்புநிலை சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் நிலவும் தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என பிரதமா் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுளள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90% மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்குத் தடையாக உள்ள இரண்டு முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் முதலாவதாக, தலித், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது .
மேலும் சமீபத்தில், பீகாரில் உள்ள தர்பங்கா அம்பேத்கர் விடுதிக்கு சென்றபோது, அங்குள்ள மாணவர்கள், 6 முதல் 7 பேர் ஒரே அறையில் தங்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள், பாதுகாப்பற்ற குடிநீர், உணவக வசதி இல்லாமை, நூலகம் மற்றும் இணைய வசதி இல்லாதது போன்ற குறைகளை மாணவர்கள் கூறினர் என்றும் இரண்டாவதாக, விளிம்புநிலை சமூக மாணவர்களுக்கான மேல்நிலைக் கல்விக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகை வழங்குவதில் உள்ள தாமதங்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகையைப் பெறும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை, 2023ம் நிதியாண்டில் 1.36 லட்சமாக இருந்தது எனவும் 2024ம் நிதியாண்டில் 69 ஆயிரமாகக் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது எனவும் எனவே தலித், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான அனைத்து விடுதிகளையும் தணிக்கை செய்து, அங்கு சிறந்த உள்கட்டமைப்பு, சுகாதாரம், உணவு மற்றும் கல்வி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றூம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.