அகமதாபாத் விமான விபத்தை நேரில் சென்று ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி!

அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தை பார்வையிட பிரதமர் மோடி இன்று நேரில் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டு லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைவதுதான் விமானத்தின் பயணத்திட்டம்.
மேலும், இந்த விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 230 பயணிகள், விமானி சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர், பணியாளர்கள் 10 பேர்,பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுகலைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்தனர்.
மேலும், இந்த விமானத்தை இயக்கிய விமானி சுமித் சபர்வால், ஏற்கனவே 8200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். துணை விமானி கிளைவ் குந்தர், 1100 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர் .
இந்தநிலையில், நேற்று 1.38 மணிக்கு பயணத்தைத் தொடங்கிய விமானம், டேக் ஆஃப் ஆகும் முன்பே தடுமாறி சில நொடிகளில் நிலைகுலைந்து போயுள்ளது. விமானம் 425 அடி உயரத்தைக் கடந்தபோது தான் கடைசியாக சிக்னல் கிடைத்தது.
625 அடி உயரத்தில் இருந்து, தலைகீழாக, மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த பயங்கரவிபத்தில், 242 பேரில், 241 பேர் உயிரிழந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார் என்ற ஒரு நபர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தை பார்வையிட பிரதமர் மோடி இன்று நேரில் செல்கிறார். விமான விபத்து நிகழ்ந்த இடத்தை அவர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர் நேரில் சந்திக்க உள்ளார் .