ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி !

ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம் என உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் பிரதமர் மோடி இதில் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.
இதற்கிடையே, இதுகுறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜி-7 மாநாட்டில் பல்வேறு தலைவர்களை சந்தித்தேன் என்றும் முக்கியமான உலகப் பிரச்சினைகள் குறித்த எனது சிந்தனைகளை பகிர்ந்து கொண்டேன் என்றும் தெற்குலக நாடுகளின் முன்னுரிமைப் பிரச்சினைகளை வலியுறுத்தினேன் என்றும் பதிவிட்டுள்ளார்