“6 மாதம் தே.மு.தி.க வளர்ச்சி பணியில் கவனம் செலுத்த உள்ளோம்”- பிரேமலதா விஜகாந்த் !

தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது.அந்த வகையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிட போவதாக, சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா நேற்று அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்தார்.
இந்நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, அ.தி.மு.க.,பா.ஜ.க. கூட்டணி உள்பட பல்வேறு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பதில் அளித்த அவர் “அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது. அது அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணைந்து எடுத்த முடிவு.சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் நிதானமாக யோசித்து தான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்.6 மாதம் தே.மு.தி.க வளர்ச்சி பணியில் கவனம் செலுத்த உள்ளோம்.
கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க, பா.ஜ.க எங்களிடம் எதுவும் பேசவில்லை.எந்த கூட்டணிக்கு செல்வது என்பது குறித்து தே.மு.தி.க இன்னும் முடிவு எடுக்கவில்லை. தொலைக்காட்சியில் பார்த்துதான் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்து தெரிந்து கொண்டேன்.
தொடர்ந்து பேசிய அவர்,அமைச்சர் பொன்முடியின் பேச்சு மிகவும் கேவலமானது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியான முடிவு எடுத்து பொன்முடியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளுக்குள்ளும் தற்போது சிக்கல் நிலவுகிறது. தே.மு.தி.க மட்டும் உறுதியாக தெளிவுடன் செயல்பட்டு வருகிறது’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.