பிரபல திரைப்படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்!

மதயானைக் கூட்டம்’ , ‘இராவணக் கோட்டம்’ படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.

விக்ரம் சுகுமாரன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த அவர், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு தொடங்கி 2000 வரை வெளியான அவர் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார்.

அடுத்து வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படத்திலும் நடித்தார். ‘ஆடுகளம்’ படத்திற்கு வெற்றிமாறனுடன் சேர்ந்து வசனம் எழுதினார்.

கதிர், ஓவியா நடித்த ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது படமான ‘இராவண கோட்டம்’ படத்தை இயக்கினார். இதில் சாந்தனு ஹீரோவாக நடித்திருந்தார்.

அடுத்து ஏறுதழுவலை மையமாக கொண்ட ‘தேரும் போரும்’ என்ற படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கி வந்தார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் நேற்று நள்ளிரவில் காலமானார்.

மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு காலமானார்.

சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள விக்ரம் சுகுமாரனின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. விக்ரம் சுகுமாரனின் மறைவுச் செய்தியை நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள சாந்தனு, “அமைதியாக உறங்குகள் சகோதரா. உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு தருணத்தையும் எப்போதும் போற்றுவேன். மிக விரைவாக சென்றுவிட்டீர்கள்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார். விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts