திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு !

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியின் தெளிவான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுமியை மா்மநபா் பின் தொடா்ந்து சென்று கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், குற்றவாளியைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, குற்றவாளி குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு முன்பு, சிறுமியின் பின்னால் நடந்து செல்வது மற்றும் சிறுமியை கடத்திச் செல்லும் சிசிடிவி விடியோ வெளியாகியிருந்த நிலையில், தற்போது, தெளிவான புகைப்படம் பதிவான சிசிடிவி காட்சி காவல்துறைக்குக் கிடைத்துள்ளது.
ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில், சிசிடிவி கேமரா இல்லாததால், குற்றவாளி எந்தப் பக்கம் தப்பிச் சென்றார் என்று தெரியாமல் இருந்த நிலையிலும், அவர் ஹிந்தியில் பேசியதாக சிறுமி கொடுத்த தகவலின் பேரிலும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.