சிவகங்கையில் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நபர் உயிரிழப்பு !

சிவகங்கை அருகே மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நபர் தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவ அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டி மட்டி கண்மாயில் இன்று பாரம்பரிய மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பிரான்மலை, அரளிபட்டி, வேங்கைபட்டி போன்ற ஊர்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் மின்னல் வேகத்தில் ஓடி, கன்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
தாங்கள் கொண்டு வந்திருந்த கொசுவலை, மீன் பிடி வலை , அரி கூடை , கச்சா உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் கெண்டை, ஜிலேபி, அயிரை, விரா உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை குடும்பத்துடன் வருகை தந்து மகிழ்ச்சியுடன் பிடித்து மூடை மூடையாக கொண்டு சென்றனர்.
இதனிடையே, சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கேசம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் இளைய மகளை அழைத்துக்கொண்டு மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டார்.மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென பாலசுப்பிரமணியன் தலைகுப்பற தண்ணீருக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர்கள் மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஆம்புலன்ஸ் வாகனம் பாலசுப்ரமணியனை மீட்பதற்காக வந்தபோது மட்டிக்கண்மாயிலிருந்து ஒரே சமயத்தில் பொதுமக்கள் மீன்களைப் பிடித்து விட்டு இருசக்கர வாகனங்களிலும் பாதசாரிகளாக நடந்தும் வெளியேறியதால் சாலை முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் சிக்கி தவித்து சுமார் 15 நிமிடங்கள் கழித்து பாலசுப்பிரமணியன் இருந்த இடத்தை அடைந்தது. உடனடியாக அவரை மீட்டு சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பாலசுப்ரமணியன் உயிரிழந்த விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைஅறைக்கு அனுப்பி வைத்த சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.