ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் ஒருவர் பலி -5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிய மெட்ரோ நிர்வாகம்!

ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பூந்தமல்லி-போரூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், சென்னை போரூர் டி.எல்.எப் – எல்&டி அருகே மெட்ரோ ரயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே ராட்சத ‘கர்டர்’ அமைக்கப்பட்டன. இந்த ராட்சத ‘கர்டர்’ நேற்று இரவு திடீரென சரிந்து கீழே மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அப்போது பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி இருசக்கர சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் மீது விழுந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நந்தம்பாக்கம் போலீசார், பரங்கிமலை போக்குவரத்து போலீசார், மெட்ரோ ரயில்வே பணி அதிகாரிகள் விரைந்து வந்து சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்திற்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானம் பணிகளை மேற்கொள்ளும் எல் & டி நிறுவனமும் இழப்பீடுகளை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது