மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு | குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சென்ற புறநகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 180 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக 12 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை விசாரணை நடத்தியது. இதில் கைது செய்யப்பட்ட 12 பேரும் தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்றும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து, குண்டுவெடிப்புச் செயலில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
கைதான 12 பேரையும் குற்றவாளிகள் என 2015-இல் தீா்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், அவா்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து தண்டனையை உறுதி செய்யுமாறு மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த முறையீட்டு மனுவையும் விசாரித்த மும்பை உயா் நீதிமன்றம், 12 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கானது ஜனவரி 31 தொடங்கி 5 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்த பின் சிறப்பு நீதிபதிகள் அமா்வு அளித்த 671 பக்க தீா்ப்பில், தவறான ஆதாரங்களை சமா்ப்பித்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களை குற்றவாளிகளாக சித்தரித்து நீதி பெற்றுத் தருவதுபோல் மாயை ஏற்படுத்தினால் மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை போய்விடும் என்றும், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தது.
மேலும், ரயில் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளின் வகைகள் குறித்த தகவல்கள் கூட விசாரணை அறிக்கையில் இடம்பெறவில்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களை ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்ததாக கூறும் கார் ஓட்டுநா்களின் சாட்சியம், வெடிகுண்டுகளை ரயில்களில் வைத்ததை பார்த்தாக கூறும் சாட்சியங்கள் கூறிய தகவல்கள் நம்பும்படியாக இல்லை என்று நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், மகாராஷ்டிர அரசு தரப்பில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

