முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு -விவசாயிகள் மகிழ்ச்சி!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து124 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில், முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா – தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான தேக்கடி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,318 கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 121.60 அடியில் இருந்து ஒரே நாளில் மேலும் 3 அடிக்கும் மேல் உயர்ந்து 124.75 அடியை எட்டியுள்ளது.
அணையில் இருந்து குடிநீருக்கான நீர் திறப்பு விநாடிக்கு 100 கன அடியாகவும், நீர் இருப்பு 3,569 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்