இன்று ..கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதல் !

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாதை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாதை எதிர்கொள்கிறது.

ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது.
முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண் அடைந்தது. ஐதராபாத் அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மலைக்க வைத்ததுடன் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்த 2 ஆட்டங்களில் முறையே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியிடமும் தோல்வியை தழுவியது.

கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி கொல்கத்தாவிடம் தோற்று கோப்பை வாய்ப்பை தவற விட்டது.
இரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் கொல்கத்தாவும், 9-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன.