கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா இரவு 7 மணி வரை திறக்க அனுமதி -தோட்டக்கலைத்துறை!

கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை இரவு 7 மணி வரை அனுமதிப்பதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதேநேரம் சுற்றுலா பயணிகள் பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, நட்சத்திர ஏரி போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டு இறுதியாக பிராயண்ட் பூங்காவிற்கு வருகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை என்று கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது பிரையண்ட் பூங்காவில் வண்ண விளக்குகள் அமைத்து கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.