முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை-சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை !

முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் முதியோர்களை பொது இடங்களில் தனித்து விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது எனவும் இதுபோன்று விடப்படும் முதியோர்கள் சுகாதாரக் குறைபாடுகளால் உடல் நலம் குன்றி, மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா் எனவும் தேசிய முதியோர் மையங்களை அமைப்பது தொடா்பாக ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் உள்ளன.
ஆனால், எந்த மாவட்டத்திலும் இந்த மையங்கள் அமைக்கப்படவில்லை எனவும் எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை முறையாக அமைக்க உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வயதானவா்களைக் குறி வைத்து கொலை, கொள்ளை போன்ற குற்ற நிகழ்வுகள் அதிகளவில் நடப்பது வேதனைக்குரியது என்றும் முதியோருக்காக அமைக்கப்பட்ட மையங்களில் அடிப்படை வசதிகளும் முறையாக இல்லை என்றூம் முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனா்.
அதோடு, இந்த வழக்கில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை முதன்மைச் செயலா், தமிழக அரசின் சமூக நலத் துறை முதன்மைச் செயலா் ஆகியோர் பதிலளீக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.