ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டதாக தகவல் – இஸ்ரேல் பாதுகாப்புத்துறை !

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள், உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது.
ஈரான் ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டு முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் முகமது பகேரி, ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லபட்டதாக செய்திகள் பரவின.
இந்நிலையில், ஈரான் முப்படை தலைமைத் தளபதி, ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர், ஈரானின் அவசரகால கட்டளை மையத் தலைவர் உள்ளிட்ட மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.