14ம் தேதி பூமி திரும்ப இருக்கும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து வரும் 14ம் தேதி இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா புறப்படுகிறார்.

இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன், அமெரிக்கா, ஹங்கேரி, போலந்தை சேர்ந்த 4 வீரர்கள் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர்.

அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26ம் தேதி மாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. 14 நாட்கள் பயணமாக சென்றுள்ள அவர்கள் விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். அத்துடன் தங்கள் கடைசி பணி ஓய்வு நாளையும் எடுத்துக்கொண்டனர்.

தற்போது பூமிக்கு திரும்புவது குறித்த நாசாவின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக ஆக்சியம் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது. அதில் மேலும், பூமியில் இருந்து 250 மைல்களுக்கு மேலே இருந்தவாறு விண்வெளி வீரர்கள் 60க்கு மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏராளமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து, தங்கள் அன்பார்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள் என கூறப்பட்டு இருந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்த நாட்களில் 230க்கு மேற்பட்ட சூரிய உதயத்தை பார்த்துள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள், சுமார் 1 கோடி அதாவது 96.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்திருப்பதாகவும் ஆக்சியம் கூறியுள்ளது.

இந்நிலையில், சுபான்ஷு சுக்லா வருகிற 14ம் தேதி பூமி திரும்புவார் என்று நாசா அறிவித்து உள்ளது. இந்திய நேரப்படி ஜூலை 14ம் தேதி மாலை 4.35 மணிக்கு டிராகன் விண்கலம் மூலம் பூமியை நோக்கி புறப்படுகிறார். 17 மணிநேர பயணத்திற்கு பிறகு டிராகன் விண்கலம் கடலில் விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குழுவினரை உற்சாகமாக வரவேற்க நாசா ஏற்பாடு செய்துள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts