இந்தியா – இங்கிலாந்து மகளிர் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறுகிறது !

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறுகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி முதல்முறையாக 3-2 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது.
அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்திய அணி கடைசியாக மே மாதம் நடந்த இலங்கை, தென்ஆப்பிரிக்கா பங்கேற்ற முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அதன் தொடர்ச்சியாக இப்போது இங்கிலாந்து ஒரு நாள் தொடரையும் வென்றால், செப்டம்பர் 30-ந்தேதி உள்ளூரில் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராவதற்கு ஊக்கமளிக்கும்.
முத்தரப்பு தொடரில் 276, 275, 337, 342 ரன்கள் வீதம் குவித்த இந்திய அணி அதே போன்று ரன்வேட்டை நடத்த ஆர்வம் காட்டுகிறது.
அதேசமயம், இங்கிலாந்து அணியில் கேப்டன் நாட் சிவெர், ‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருப்பது அவர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
அவர்கள் 20 ஓவர் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது