நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – இந்தியா கூட்டணி எம்பி-க்கள் வலியுறுத்தல் !

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க வேண்டும் என, இந்தியா கூட்டணி எம்பி-க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் படுகொலைக்கு, இந்தியா பதிலடி கொடுத்தது. இதில், ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன.
இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதலில் இந்தியா எந்தளவுக்கு பாதிப்பை எதிர்கொண்டன என்பது குறித்து ஒன்றிய அரசிடம் முழுமையான விளக்கம் இல்லை என எதிக்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.
எனவே, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, விசிக, சமாஜ்வாதி, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்)எல் போன்ற கட்சிகள், சிறப்பு கூட்டத் கூட்ட கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தனித்தனியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி உலகம் முழுவதும் எம்.பிக்கள் குழு அளித்த விளக்கம் வரை தெரிவிக்குமாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல்கள், பூஞ்ச், உரி மற்றும் ரஜோரியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், போர் நிறுத்த அறிவிப்புகள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவை குறித்து, உலகின் முன்பு தனது கருத்துக்களை ஒன்றிய அரசு கூறும்போது, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பதும் அவசியம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்