ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் குற்றவாளி- திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு !

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய வழக்கில் கைதான ஹேமராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண், திருப்பூரில் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் பிப்ரவரி 7ஆம் தேதி வழக்கம் போல தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார்.
ரயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்- கே.வி.குப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது இளம்பெண் கழிவறைக்கு சென்றார். கழிவறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அவரை வழிமறித்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதை எதிர்பாராத இளம்பெண் கூச்சலிட சக பயணிகள் அங்கு வந்தனர். அதற்குள்ளாக அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவர் வேறு பெட்டிக்கு மாறி தப்பினார். பெண் கீழே விழுந்ததை பார்த்த சக பயணிகள் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தில் கிடந்த கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தலையிலும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதனையடுத்து இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிய வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, ஹேமராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும், ஹேமராஜுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் ஜூலை 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.