கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வுமையம்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென் மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உருவானது. இந்த புயல் சின்னம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில், வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்தது.

தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில், மேற்கு வங்கத்திற்கும், வங்க தேசத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. இது மேலும் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக இன்று மாலை மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் 31-ஆம் தேது வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts