தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 5ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் வரும் 5ம் தேதி வரை ஒருசில இடங்களில் படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும் என்றும், உள் தமிழகத்தின் வடகிழக்கு பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும் இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts