கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்திற்கு கேட் கீப்பர் தான் காரணம் -புலனாய்வு அறிவிப்பு !

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்திற்கு கேட் கீப்பர் கேட்டை திறந்தே வைத்திருந்ததுதான் காரணம் என்று புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார்.
முதலில் கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், கேட்டை மூடுவதற்கு முன்பாக திறந்துவிடும்படி வேன் ஓட்டுநர்கேட்டு கொண்டதாகவும், அதனால் தான் கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என்றும், ஆனால் இது கேட்கீப்பரின் தவறு என்றும் ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து துறை ரீதியான விசாரணைக்கு தெற்கு ரெயில்வே உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தெற்கு ரெயில்வே துணை முதன்மை பாதுகாப்பு அதிகாரி தலைமையில், திருச்சி ரெயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு அதிகாரி மகேஷ்குமார் உள்பட 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவினர் விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் கீப்பர், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், கடலூர் ரெயில் நிலைய மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் 2 பேர், விபத்துக்கு உள்ளான பள்ளி வேன் ஓட்டுநர் உட்பட 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணை அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து நடைபெறும் என்றும், இந்த விசாரணை முழுமையாக முடிவடைந்ததும், அதன் அறிக்கை ரெயில்வே தலைமை அதிகாரிகளிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு கேட் கீப்பர்தான் காரணம் என்று புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக ரெயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கொடுத்துள்ளார்.
விபத்துக்குப் பின், ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, ‘கேட்டை மூடவில்லை’ என்று ஒப்புக்கொண்டது ரெயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகி உள்ளது. இதன்மூலம் கேட் கீப்பரின் அலட்சியமே இந்த ரெயில் விபத்துக்கு காரணம் என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.