முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் !

சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க. முத்து இன்று காலை 8 மணியளவில் காலமானார்.
மு.க. முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனிடையே, மு.க.முத்து உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு முத்தமிழறிஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது.
அங்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மு.க.முத்து இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு தொடங்கியது.
இவரது இறுதி ஊர்வளத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் மு.க முத்துவின் சகோதரருமான முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் எம்.பி கனிமொழி மற்றும் பல்வேறு தலைவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி-பத்மாவதி தம்பதியருக்கு பிறந்த மு.க. முத்து. 1970-களில் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு, சமையல்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களில் தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார்.
‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல்களாக மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.