தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு !

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில், திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி இதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. ஜூன் 9-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம் என்ற நிலையில், கடந்த 6-ம் தேதி திமுக வேட்பாளர்களான கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல, அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். தருமபுரி மாவட்டம் பெண்ணாகரத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.
தற்போது வரை 6 பதவியிடங்களுக்கு 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், இன்றுடன் மனு தாக்கல் நிறைவடைய உள்ளது. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது.