முறையாக செயல்படாத நெல் கொள்முதல் நிலையம் -விவசாயிகள் வேதனை!

பெரியபாளையம் அருகே, நெல் கொள்முதல் நிலையம் முறையாக செயல்படாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் சமீபத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, ஆவாஜிப்பேட்டையில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்றுள்ளனர். போதிய இடவசதி, சேமிப்புக் கிடங்கு இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் ட்ராக்டரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சில விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலை போட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து முளைக்க தொடங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதோடு, இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள விவசாயிகள், சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.