சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பலி !

சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஆண்டியாபுரம் பகுதியில் ஶ்ரீ மாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், வழக்கம்போல் இன்று ஏராளமான தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மருந்துக்கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வெடி விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 3 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மூன்று பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.