இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.
இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அங்குள்ள லீட்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.
பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 364 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நான்காம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்றைய ஆட்டத்தில், 188 ரன்கள் சேர்த்த பிறகே இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது.
இந்த இன்னிங்சில் பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர் சாக் க்ராலி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் விழுந்தன.
ஜோ ரூட் நிலைத்து நின்று விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களை குவித்து இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.