திருப்பத்தூர் | தனியார் கல்குவாரிக்கு அபராதம் விதித்த தேவகோட்டை சார் ஆட்சியர்!

திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட மல்லாக்கோட்டை தனியார் கல்குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சார் ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மல்லாக்கோட்டை தனியார் கல் குவாரியில் கடந்த மாதம் 20 ம் தேதி, 400 அடி ஆழப் பள்ளத்தில் விதிகளை மீறி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக துளையிடும் பணி நடைபெற்றது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது இதுதொடர்பாக குவாரி உரிமையாளர் கலையரசன் அவரது தம்பி கமலதாசன், மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதால் கல் குவாரி உரிமத்தை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதோடு, உரிமம் காலாவதியான நிலையில் வேறொரு இடத்திற்கு வாங்கிய அனுமதியை வைத்து குவாரி 8 மாதமாக இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த மல்லாக்கோட்டை தனியார் கல்குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சார் ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.