கிளாம்பாக்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் -நேற்று ஒரு நாளில் 1.66 லட்சம் பேர் பயணம் !

கிளாம்பாக்கத்திலிருந்து 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் நேற்று மட்டும் 1.66 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், முகூர்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
சனிக்கிழமை பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்பட்டதால், வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல தொடங்கியிருந்தனர்.
இந்நிலையில் ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6 லட்சத்து 6,430 பயணிகள் பயணித்துள்ளனர் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று 24.00 மணி நிலவரப்படியும் மற்றும் இன்று அதிகாலை 02.00 மணி வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் 2,092 பேருந்துகளும், 936 சிறப்புப் பேருந்துகளும் என 3,028 பேருந்துகளில் 1,66,540 பயணிகள் பயணம் செய்துள்ளனர் எனவும் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார்.