கோவை அருகே, வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து !

கோவை அருகே, வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் கோவை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே பகுதியில், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணி புரியும் பிரவீன் என்பவரும் வசித்து வருகிறார். இதற்கிடையே கல்லூரி மாணவி அஸ்விதாவை, பிரவீன், ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி அஸ்விதாவிடம் பிரவீன் கூறியதாகவும் அதற்கு அஸ்விதா மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், மாணவி தனியாக வீட்டில் இருக்கும்போது கத்தியால் குத்தி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நிதி நிறுவன ஊழியர் பிரவீன் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.