முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை அப்பலோ மருத்துவமனையில் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும்வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அதேசமயம் உறுப்பினர் சேர்க்கையில் பின் தங்கியுள்ள ஓரிரு மாவட்டங்கள், தொகுதிகளைக் குறிப்பிட்டு அவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் கவனித்துச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், சில பாகங்களில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களில் சில குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் முதலில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
வீடு வீடாகச் செல்லும் போது மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு, திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து மகிழ்ச்சியுடன் மக்கள் பேசுவது ஆகியவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் விளக்கினர்.
இக்கலந்துரையாடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும் கேட்டறிந்தார்
