சாதி அடிப்படையில் கோயிலுக்குள் செல்வதை தடுத்தால் வழக்கு பதிவு செய்யவேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !

கோயிலுக்குள் செல்வதை சாதி அடிப்படையில் எவரேனும் தடுத்தால் அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் அய்யனார் கோயிலில் பட்டியலினத்தவர் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வெங்கடேசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்; அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி எனும் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்து தள்ளி விட்டனர் என்றும், கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்கு பின் இருந்து தான் சுவாமி தரிசனம் செய்ய பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றும் ஆகவே ஜூலை 16ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர் திருவிழாவில் பட்டியல் இனத்தவர்கள் பங்கேற்கவும், கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது; சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் ஜாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்றும் அய்யனார் கோயிலுக்கு பட்டியலின மக்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும், கோயிலில் அனைத்து தரப்பு மக்களும் தரிசனம் செய்வதையும், விழாக்களில் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

மேலும், பல்வேறு தலைவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆலய நுழைவுச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை யாரேனும் தடுத்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts