மதுரை ஆதீனத்திடம் சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று விசாரணை!

மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கு தொடர்பாக மதுரை ஆதீனத்திடம் சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
கடந்த மே 2ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த மதுரை ஆதீனத்தின் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மற்றொரு காரும் மோதிக்கொண்டன. இதில் இரு கார்களும் லேசான அளவில் சேதமடைந்தன.
இதையடுத்து, சென்னை கட்டாங்குளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை காரை ஏற்றி சிலர் கொல்ல முயன்றதாக தெரிவித்தார். மேலும், குறிப்பிட்ட மத அடையாளங்களை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை அயானவரத்தை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் கடந்த ஜூன் 24ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய புகார் மனுவில், ‘மதுரை ஆதீனம் தன்னை கொலை செய்ய வந்தவர்கள் குறித்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை பரப்பியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதன்பேரில் 4 பிரிவுகளின் கீழ் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, மதுரை ஆதீனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘ஆதீனத்திற்கு 60 வயது கடந்த நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை.
காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை செய்துகொள்ளலாம். காவல்துறை விசாரணைக்கு மதுரை ஆதீனம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் விமானம் மூலம் மதுரை வந்து ஆதினத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.