வால்பாறையில் சிறுத்தை கவ்வி சென்ற குழந்தை சடலமாக மீட்பு !

வால்பாறை அருகே சிறுத்தை கவ்வி சென்ற குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்முந்தா-மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோசினி விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமியை தூக்கிச் சென்றது. திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குழந்தையின் தாய் அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டு உள்ளார்.
இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் மோப்ப நாய்கள், ட்ரோன் கேமரா உதவியுடன் சிறுத்தையை தேடி வந்தனர். இந்நிலையில், மோப்ப நாய் உதவியுடன் வீட்டின் அருகே சிறுமியை சடலமாக மீட்டனர்.