மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பதை கைவிடுவதாக பாஜக அரசு அறிவிப்பு !

மகாராஷ்டிராவில் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இந்தி மொழி திணிப்பதை கைவிடுவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி மகாராஷ்டிராவில் ஆங்கிலம் மற்றும் மராத்தி வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தி விருப்ப மொழியாக மட்டுமே கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், இந்தி கற்க மறைமுகமாக கட்டாயப்படுத்துவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில் கூடிய மகாராஷ்டிர அமைச்சரவை இந்தி மொழி கற்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட இரண்டு உத்தரவுகளையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நரேந்திர ஜாதவ் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்