ஐ.பி.எல் | பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி-தனது முதல் கோப்பையை பெற்று அசத்தல் !

18-வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், தொடக்க வீரர்களாக விராட் கோலியும் ஃபில் சால்ட்டும் களமிறங்கினர்.
இதில் ஃபில் சால்ட் 16 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து மயங்க் அகர்வால் 24 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். நீண்ட நேரம் களத்தில் நின்ற விராட் கோலி 35 பந்துகளுக்கு 43 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து ரஜத் படிதார் 26 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 25 ரன்களும், ஜிதேஷ் சர்மா 24 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 190 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கைல் ஜேமிசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர்.
இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய இங்கிலிஸ் 39 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு வந்த வதேரா 15 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 6 ரன்னிலும், ஓமர்சாய் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்று, 18 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.